தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து புதிய அரசின் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞரின் உருவப்படத்தை சட்டசபையில் அவரின் நினைவு தினமான வரும் ஆகஸ்ட் 7 தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க இருப்பதாகவும், அதற்காக அழைப்புவிடுக்கவே அவர் டெல்லி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இன்று டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், '' தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவப்படத் திறப்பு விழாவிற்குக் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்தேன். அதேபோல் மதுரை நூலகம், கிண்டி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவைத் தலைமையேற்று நடத்த குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். மேகதாது அணை தொடர்பாக எந்த ஆலோசனைக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என எங்கள் அமைச்சர் தெரிவித்துவிட்டார். அதைத்தான் செய்வோம்'' என்றார்.