திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நான்காம் கட்ட ஆய்வை நடைத்தி வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மற்றும் தொல்லியல் துறையினரின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உள்ள சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் தியாகராஜ சாமி திருக்கோயில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாரூர், தஞ்சை ,நாகை கடலூர் ,விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 625 கோயில்களுக்கு சொந்தமான 4359 சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் மூன்று கட்ட ஆய்வுகள் முடிவுற்று, 580 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. தொடர்ந்து நான்காவது கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் 30 க்கும் மேற்பட்டோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 829 சிலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த நான்காம் கட்ட ஆய்வு நாளை வரை நடைபெறும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.