Skip to main content

திருச்சியில் சாட்டையை சுழற்றும் டிடிவி தினகரன் - கட்சி தாவும் நிர்வாகிகள் !

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

எம்.பி.தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தோல்விக்கான காரணங்கள் பற்றி கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 1 ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் தொடர்ந்து மாவட்ட ரீதியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அமமுகவினர் எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பான அறிவிப்புகள் உடனடியாக ஏதும் வரவில்லை.

ttv


அமமுக நிர்வாகிகள் ஆங்காங்கே தமிழகம் முழுவதும் கூண்டோடு அதிமுக மற்றும் திமுகவில் சேர்ந்து வரும் நிலையில், வரும் 22 ஆம் தேதி திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மாநகர் என மூன்று மாவட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். 

திருச்சி வயலூர் மணிமுத்து செல்வம் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் அமமுகவின் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்ல பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் வரை ஒவ்வொரு நிர்வாகியும் கலந்துகொள்ள வேண்டும் என்று அமமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டம் தொடர்பாக அமமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “தேர்தல் தோல்விக்குப் பின் பொதுவாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எல்லா நிர்வாகிகளும், வேட்பாளர்களும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் தேர்தல் களம் தொடர்பாக அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பலர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மீது தினகரனிடம் புகார்கள் சென்றுள்ளன.

 

ttv


இந்நிலையில்தான் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டத்தை நடத்த இருக்கிறார் தினகரன். தமிழ்நாட்டின் மையமான திருச்சியில் இருந்து ஆய்வைத் தொடங்குகிறார். வெறும் மாவட்ட நிர்வாகிகளை மட்டும் சந்திக்காமல் கிளை கழக நிர்வாகிகள் வரைக்கும் சந்தித்து கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளின் உணர்வுகளை அறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்க இருக்கிறார் தினகரன்.

சில மாவட்டச் செயலாளர்கள் இப்போதே களையெடுப்புப் பட்டியலில் இருக்கின்றனர். ஆய்வுக் கூட்டங்கள் முடிந்த பின்னர் நிர்வாகிகளை நீக்கம் செய்யவும் முடிவு செய்திருக்கிறார் தினகரன். அவர்களில் சிலர் இப்போதே அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளுக்கு தாவி வருகிறார்கள்” என்கிறார்கள்.

இந்தக் கூட்டங்களில் நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகிகளுக்கான அடையாள அட்டை தயாராகி வருகிறது. நிர்வாகிகள் தவிர வேறு யாரும் ஆய்வுக் கூட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள். 

 

ttv


திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் சாருபாலா தொண்டைமான் ஆரம்பத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசனுடன் இணைந்து சின்னமே இல்லாமல் நடத்திய பிரச்சாரம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திய நிலையில் எப்படியும் அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றிபெறுவேன் என்கிற நம்பிக்கையில் இருந்த சாருபால தொண்டைமான் மிக குறைந்த ஓட்டுகளையே வாங்கியது அவருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஸ்ரீரங்கம், திருவரம்பூர், திருச்சி மேற்கு, ஆகிய இடங்களில் மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருக்கிறார்கள். இது சாருபாலா தொண்டைமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எல்லாம் விவாதம் இருக்கும் என்கிறார்கள். 

அமமுகவின் இந்த தோல்வியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சி மாற்ற தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அதிமுக மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் இரண்டு பேரில் ஒருவர் அதிமுக பக்கமமும், இன்னோருவர் திமுக பக்கமும் செல்ல நேரம் குறித்து விட்டதாக சொல்கிறார்கள். இந்த பரபரப்பான சுழ்நிலையில் தான் இந்த தோல்வி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. ஆக பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள். 

 

 

 

சார்ந்த செய்திகள்