ஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் பொதுமக்களை தொந்தரவு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்டது நாட்டாணிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு தஞ்சை மன்னர்கள் மானியமாக அளித்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் வழிவந்தவர்கள் சவுரிராஜன்- செண்பகத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ராமானுஜன், சீனிவாசன் என இரு மகன்கள் உள்ளனர். மன்னர் காலத்தில் மானியமாக வழங்கப்பட்ட சுமார் 170 ஏக்கர் நிலங்கள் நாட்டாணிக்கோட்டை வடக்கு, தெற்கு, கழனிவாசல், முடப்புளிக்காடு, நீலகண்டபுரம் என பரவலாக உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த செண்பகத்தம்மாள் மற்றும் அவரது இளைய மகன் சீனிவாசன் ஆகியோர் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மூத்த மகன் ராமானுஜனும் சிலரிடம் கிரயம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமானுஜன், சீனிவாசன் சகோதரர்கள் இடையே சொத்துப்பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, ராமானுஜனுக்கு நீதிமன்றம் 70 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமானுஜன் மற்றும் அவரது வழக்கறிஞர் கோவிந்தராசு மற்றும் நீதிமன்ற ஆணையர்கள் பழனிவேலு, ஜெயகுமார் ஆகியோர் சனிக்கிழமை அன்று சம்பந்தப்பட்ட நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் அளவீடு செய்ய வந்துள்ளனர்.
இதையடுத்து பல ஆண்டுகளாக தாங்கள் கிரையம் பெற்று குடியிருந்து வரும் இடம் பறிபோகுமோ என அச்சப்பட்ட, 500 பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நீதிமன்ற ஆணையர்களிடம் கண்ணீருடன் முறையிட்டனர். இதையடுத்து திகைத்துப்போன நீதிமன்ற ஆணையர்கள், " அனைத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறி, காவல்துறைக்கு தகவல் அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர். பின்னர் இராமனுஜன், அவரது வழக்கறிஞர் கோவிந்தராசு ஆகியோரிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
இதையடுத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்திற்கும் சென்று முறையிட்டனர். பொதுமக்கள் சார்பாக ராஜேந்திரன் என்பவர் இராமானுஜன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் மனு ரசீது அளித்த காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை எனக்கூறி மாலை 5 மணி வாக்கில், கிராம தலைவர்கள் வீராசாமி, சுந்தர்ராசு, நீலகண்டன் ஆகியோர் தலைமையில், பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் காவல்நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் 8 பேர் மீது அரசு அதிகாரிகளை ஆபாசமாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்தது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஞாயிறு அன்று கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து முறையிடுவதற்காக தஞ்சாவூர் புறப்பட்டு சென்றனர்.
இச்சம்பவம் காரணமாக இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்தை விட்டு அப்புறப்படுத்த நடந்து வரும் முநற்சியால் அப்பாவி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தங்களுக்கு உரிய தீர்ப்பை வழங்குவார் என நம்பிக்கையுடன் உள்ளனர்.