குடிமகன்களுக்காக டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் மாற்றுப் போதைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். மாறுவது மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவர்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை புதுக்குளத்தின் கரையில் இந்த மாற்றுப் போதை இளைஞர்கள் பயன்படுத்தி வந்த ஊசிகள், மருந்து புட்டிகள் கிடந்ததை நக்கீரன் வெளிக்காட்டியது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் யாரும் சிக்கவில்லை.
ஆனாலும் இளைஞர்களை, மாணவர்களை குறிவைத்து அந்த கும்பல் வேகமாக வியாபாரத்தை செய்ய தொடங்கியது. கடந்த மாதம் புதுக்கோட்டை நகரில் ஒரு பெண். அறுவைச் சிகிச்சையின்போது வலி நிவாரணியாக பயன்படுத்தும் ஊசிகளை, மாத்திரைகளை போதைக்காக இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது அறிந்து போலீசார் பிடித்தனர். அவரை கைது செய்ய பல தரப்பில் இருந்தும் முட்டுக்கட்டை போட்டாலும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த பெண் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தநிலையில்தான் கடந்த வாரம் அறந்தாங்கி அருகில் உள்ள அரசா்குளத்தில் இரு இளைஞர்களை மாற்றுப் போதையில் தள்ளாடிய இருவரை கைது செய்த அறந்தாங்கி டி.எஸ்.பி. தலைமையிலான நாகுடி சப். இன்ஸ்பெக்டர் டீம் அவர்களிடம் விசாரித்த போது, போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள், ஊசிகள் இருப்பதை எடுத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மாத்திரை, ஊசிகளை கொடுக்கும் அவினாசி பெண் உள்பட 4 பேரையும் கைது செய்து சுமார் 2500 வலிநிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் புதுக்கோட்டை ஆணழகன் கைது செய்யப்பட்டார். இப்படி அதிரடி கைதுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தான்.
இன்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல்நிலைய எல்லையில் தான் அதிகமாக போதைக்காக கஞ்சா, ஊசி, மாத்திரை, மருந்துகள் விற்கப்படும் தகவல் அறிந்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் 6 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.
பெரியகுளம் மியூசியம் பிரபாகரன் (27), ரெட்டைக்குளம் பியூசியம் சுகு (எ) சுகுமார் (27), சங்கரமடம் தர்மா ( 25), ஆர்ஜி புரம் ராகசேந்திரன் (24), நரிமேடு சமத்துவபுரம் சதீஸ்வரன் (26), பாண்டியன் (24) ஆகிய 6 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த இளைஞர்களிடம் போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்த வலி நிவாரணி மாத்திரைகள், ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீசாரின் இந்த நவடிக்கையை பாராட்டும் பொதுமக்கள் இதேபோல நகரில் இருந்து கிராமங்களுக்குள்ளும் பரவியுள்ள மாற்றுப் போதைக்கு ஊசி, மாத்திரை விற்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். எதற்கெல்லாமே நல்ல பெயரை வாங்கிய புதுக்கோட்டை தற்போது மாற்றுப் போதையில் தள்ளாடிவருவது வருத்தமளிக்கிறது.