விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா கைது செய்யப்பட்டார். ஆனால் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோரின் செயல்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாததால் அவர்களை கைது செய்ய தேவையில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மெய்யபுரம் என்ற ஊரில் பா.ஜ.க.வினர் விநாயகர் சிலை அமைத்திருந்தனர்.
அந்த சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலையில் கரைப்பதற்கு முடிவு செய்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பதற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை திருமயம் தாலுகா பா.ஜ.க.வினர் அழைத்திருந்தனர்.
மெய்யபுரம் அருகே ஒரு இடத்தில் மேடை அமைக்க இந்து அமைப்பினர் போலீசாரிடம் கடிதம் கொடுத்து அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுக்கவே எச்.ராஜா போலீசார் மற்றும் நீதிமன்றத்தை அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது. எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி திருமாவளவன் கூறியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்து, 4 வாரங்களுக்குள் எச்.ராஜா பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் கோஷம் எழுப்புவது என்பது கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றம். சும்மா இருப்பவர்களை கைது செய்ய முடியாது.
என்னைப் பொறுத்தவரையில் எச்.ராஜா வழக்கிலோ, இதற்கு முன்பு எஸ்.வி.சேகர் வழக்கிலோ அந்த மாதிரியான ஒரு நிலை இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. கைது செய்ய தேவையில்லை. கைது செய்யப்பட வேண்டும் என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகவில்லை என்றார்.