மோடியும் பாஜகவும் பேசுகிற தேசபக்தி எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றக்கூடியது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. தேசிய வெறியையும், இந்து மத வெறியையும் உசுப்பிவிட்டு, அதில் ஏற்படும் கொலைவெறி உஷ்ணத்தில் தேர்தல் குளிர்காய்வதே பாஜகவின் வாடிக்கை.
2014 தேர்தலுக்கு மோடியை பில்டப் செய்வதற்கே அம்பானிகளும் அதானிகளும் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பான்ஸர் செய்தார்கள். உலகின் மிக முக்கியமான கட்டுமானங்களையெல்லாம் மோடியின் குஜராத்தில் இருப்பதுபோல போட்டோஷாப் வேலை செய்து பிரச்சாரம் செய்தார்கள்.
மோடி வந்தால் பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டு ஒடுங்கிவிடும் என்றார்கள். சீனாவோ மோடியின் 56 இன்ச் மார்பைப் பார்த்து அரண்டு பதுங்கிவிடும் என்றார்கள்.
தேனாறும் பாலாறும் இந்தியாவின் தெருக்களில் குழாய்கள் மூலம் பாயும் என்றார்கள். கங்கையில் மிதக்கும் அழுகிய பிணங்கள் இனி மிதக்காது. கங்கை நீர் பளிங்கு நீர்போல பளபளக்கும் என்றார்கள்.
இந்தியா உலகின் வல்லரசாகிவிடும். இந்தியாவில் உள்ள கறுப்புப்பண முதலைகள் அனைவரும் சிறையில் தள்ளப்படுவார்கள். பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிடும் என்றெல்லாம் பில்டப் செய்தார்கள்.
ஆனால், இதெல்லாம் நான்காண்டுகளில் எந்த அளவுக்கு உண்மையாகியது? எதுவுமே இல்லை. எல்லாமே வாய்ச்சவடால்தான். பாகிஸ்தானையும் சீனாவையும் மிரட்டுவார் என்று சொல்லப்பட்ட மோடி, பத்திரிகையாளர்களையே சந்திக்க பயப்படுவது பிறகுதான் தெரிந்தது.
பாகிஸ்தானும், சீனாவும் காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் அளவுக்கதிமாக மிரட்டத் தொடங்கிவிட்டன. இவரும் பயந்து நடுங்கியதை இந்தியா பார்த்தது.
எதைச் செய்தாலும் தான்தோன்றித்தனமாக செய்துவிட்டு மக்களை வாட்டி வதைத்ததுதான் மோடியின் அதிகபட்ச சாதனை. சொந்த மனைவிக்கு மனைவி என்ற அந்தஸ்த்தையும் கொடுக்கவில்லை. சாதாரண குடிமகள் என்ற அளவுக்கு அவருக்குரிய சுதந்திரத்தையும் கொடுக்கவில்லை.
மோடியின் பொய்களும் உறுதியற்ற தன்மையும் அவரை அவருடைய கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தே பிரிக்கத் தொடங்கியிருக்கிறது.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான ஜீலானியிடம் 1986 ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை கொடுக்கமாட்டேன் என்று மோடி ஆவேசமாக கூறினார். ஆனால், பாஸ்போர்ட்டை கொடுத்ததுடன், ஜீலானியின் உறவினருக்கு அரசு வேலையும் கொடுத்தார்.
பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்து அந்த கட்சியின் தலைமையிலான அரசில் பங்கும் வகிக்கிறார் மோடி.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் தூதரகம் அழைத்ததால், இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். ஆனால், பிறகு தானாகவே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ்செரீபை மோடி அழைத்தார். பிறகு, முன்னறிவிப்பே இல்லாமல் பாகிஸ்தான் சென்று நவாஸ் செரீபை சந்தித்தார். நவாஸின் தாய் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட மஸரத் ஆலமை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டார். ஆலம் உத்தரவின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் 200 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் விதவை மனைவியரின் மறுவாழ்வுக்காக ஆஸியா ஆன்ட்ராபி என்பவர் தொடங்கிய அமைப்புக்கு அனுமதி கொடுத்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றி, பாகிஸ்தான் தேசியகீதத்தை பாடவும் அவருக்கு அனுமதி கொடுத்தார் மோடி.
2016 ஜனவரி 2 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் உள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் தளத்தையே அழித்தனர். இதில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டதாக சொன்னாலும், இந்திய தரப்பில் 6 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கூறியது விமர்சனத்துக்கு உள்ளாகியது. மோடியின் பொறுப்பில் உள்ள இந்தச் சம்பவம் பற்றிய விசாரணை விவகாரம் இதுவரை முடிவுக்கு வரவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைக் காட்டிலும் மோடி தலைமையிலான 4 ஆண்டுகளில் நடைபெற்ற தாக்குதல்கள் அதிகம் ஆகும்.
காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சியில் உயிரிழந்த இந்திய வீரர்களைக் காட்டிலும் மோடி ஆட்சியின் முதல் மூன்றாண்டுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம்.
ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க மோடி தன்னைப்போல ஒரு தேசியவாதி யாரும் இல்லை என்கிற ரேஞ்சுக்கு வாய்ச்சவடால் விட தொடங்கியிருக்கிறார்.
எனினும் அவருடைய வெட்டி ஜம்பங்கள் எதுவும் எடுபடாமல் போய்க்கொண்டிருக்கின்றன. குஜராத்தில் மோடி திணறிய திணறலில் தொடங்கியது அவருடைய வீழ்ச்சி. தட்டுத்தடுமாறி வெற்றியைத் தக்க வைத்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த வெற்றி கைகொடுக்காது என்பது அரசியல்வாதிகளுக்கு தெரிந்துவிட்டது.
குஜராத் தேர்தலுக்கு முன்னரே, பாஜகவின் இயல்பான கூட்டாளியாக கருதப்பட்ட சிவசேனா, பாஜகவின் உறவை முறித்துக்கொண்டது. மோடியின் செயல்பாடுகள் அந்தக் கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதுமட்டுமின்றி காங்கிரஸையும் ராகுல் தலைமையையும் அது ஆதரித்திருக்கிறது.
சிவசேனாவைத் தொடர்ந்து, ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சியும் தனது உறவை முறித்துக் கொண்டது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற மோடி மறுத்துவிட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மாநில உரிமைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். தெலுங்குதேசம் எம்பி ஒருவர் தென்னிந்தியா தனிநாடாக மாறும் நிலைக்கு தள்ளப்படுவதாக எச்சரித்திருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து, பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிற நிதிஷ்குமாரும் சமயம்பார்த்து சிறப்புநிதிக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
கூட்டணிக் கட்சிகளின் இந்த முடிவுக்கு காரணம் என்னவென்றால், குஜராத்தில் திக்குமுக்காடிய பாஜக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கர்நாடாக மாநிலங்களில் தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை இந்தக் கட்சிகள் உணர்ந்திருக்கின்றன.
தவிர, கடந்த தேர்தலில் கிடைத்தது போல பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் துணையோடு அறுதிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவும் மோடியும் தன்னிச்சையாக செயல்படுவதாக இந்தக் கட்சிகள் கருதுகின்றன.
எது எப்படியோ சமீபத்தில் வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களும், 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலும் பாஜகவுக்கும் மோடிக்கும் சரியான பாடம் புகட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.