திருவாரூரில் மின் கணக்கெடுப்பு செய்ய ஆளில்லாததால் ஜூன் மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. சாத்தனூர், சித்தாம்பூர், வேல்குடி, பழையனூர் ஆகிய கிராமங்களுக்கு வடபாதிமங்கலத்தில் மின் பொறியாளர் அலுவலகம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இங்கு மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கடந்த ஆறாவது மாதம் (ஜூன்) கட்டிய மின் கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என தினசரி பத்திரிகைகளில் வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், ‘மின் கணக்கீடு செய்ய ஆள் இல்லை. அதனால் ஆறாம் மாதம் கட்டணத்தை செலுத்துங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்கள் கோடைக் காலம் என்பதாலும் பள்ளி விடுமுறைக் காலம் என்பதாலும் அதிகப்படியான மின் சாதனங்கள் இயக்கப்பட்டிருக்கும். இதனால் அதற்கான மின் கட்டணம் வந்திருக்கும். ஆனால் இப்பொழுது மின்சாரத்தின் பயன்பாடு ஓரளவு குறைந்திருக்கும். இதனால் ஆறாம் மாதத்திற்கான மின் கட்டணத்தை விட இந்த மாதம் மின் கட்டணம் கணக்கிடப்பட்டிருந்தால் குறைவாகத்தான் வந்திருக்கும். ஆனால் பழைய மின்கட்டணத்தையே கட்டச் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.