பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரைப் பயணத்தை வருகின்ற 21ம் தேதி சென்னையில் தொடங்கி 28 ம் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார்.
இந்நிலையில் திண்டுக்கல்லிற்கு 28ம் தேதி காலை மருத்துவர் ராமதாஸ் வருகை தந்து தமிழின் மகத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார். மருத்துவர் ராமதாஸின் திண்டுக்கல் வருகையை ஒட்டி, ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர்கள் ஜோதிமுத்து, ஜான் கென்னடி, சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு நிகழ்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் பாமக மாநிலப் பொருளாளர் கவிஞர்.திலகபாமா, மாவட்ட தலைவர்கள் மணி, திருப்பதி, வைரமுத்து மற்றும் ஒன்றிய நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஜி.கே.மணி சாலைகளில் நடந்து சென்ற பொதுமக்கள், வணிகர்கள் , பத்திரிகையாளர்கள் என அனைவரிடத்திலும் நேரடியாகச் சென்று ராமதாஸ் கலந்து கொள்ளும் தமிழை தேடி நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அழைப்பிதழை வழங்கினார். அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ''தமிழை வளர்க்க வேண்டும், மீட்டெடுக்க வேண்டும் என பாமக தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக வருகின்ற 21 ம் தேதி தாய்மொழி தினத்தன்று பாமக நிறுவனர் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ் குறித்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளும் அவர் தமிழகத்தின் சென்னை, புதுச்சேரி . தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 28ம் தேதி திண்டுக்கல்லில் தொடங்கி மதுரையில் நிறைவு செய்கிறார். இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்துப் பேசவே மு.க.ஸ்டாலினை சந்தித்தார். மேலும் வன்னியர்களுக்கு 10.5. சதவீத இட ஒதுக்கீடு, தமிழ் வளர்ச்சி, நீர் மேலாண்மை குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களே இல்லை. இதனால் கடுமையான பாதிப்பு . மத்திய அரசுப் பணிகளில் எந்த துறையாக இருந்தாலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்''என்றார்.