Skip to main content

கள்ளக்குறிச்சி விவகாரம்; சட்டப்பேரவையில் கடும் அமளி! 

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
There is a lot of tension in the Legislative Assembly

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் நேற்று (20.06.2024) தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கள்ளச்சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாகத் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21.06.2024) காலை இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை), மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. 

There is a lot of tension in the Legislative Assembly

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாகச் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்கள் ‘பதவி விலகுங்கள் ஸ்டாலின்’ என்று எழுதப்பட்ட காகிதத்தைக் காண்பித்து முழக்கமிட்டனர்.

முன்னதாகக் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். அதன்படி சட்டமன்றத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துனைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து வந்ததும் கவனிக்கத்தக்கது. 

சார்ந்த செய்திகள்