தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம்பட்டவர்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘’மக்கள் எல்லாவற்றுக்கும் போராட்டம் போராட்டம் என்று தொடர்ந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்’’என்று தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டார் என்று தலைவர்கள் கொந்தளித்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில், 3 பேர் கொல்லப்பட்டதால் சிலர் காயத்துடன் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் இயக்குநர் பா.ரஞ்சித்.
ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கியவர் என்பதாலும், மீண்டும் ரஜினியை வைத்து இவர் இயக்கிய காலா படம் தற்போது திரைக்கு வர விருப்பதாலும், ரஜினி குறித்த சர்ச்சை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரஞ்சித், “அது அவருடைய கருத்து. போராட்டத்தில் தான் நான் இருக்கிறேன். போராட்டத்தின் மூலமாகத்தான் இங்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரஜினி சாரும் போராட்டமே கூடாது எனச் சொல்லவில்லை. காலையில் அவரிடம் பேசினேன். போராட்டமே வேண்டாம் என்று நான் பேசவில்லை. ஆனால், போராட்டத்தில் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது என்ற வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார்’’என்று கூறினார்.