சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா நாளை தமிழகம் திரும்ப உள்ள நிலையில், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அமைச்சர்கள் சார்பில் நேற்று இரண்டாம் முறை அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டிஜிபியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை சார்பில் திடீர் எச்சரிக்கை அறிக்கை ஒன்றும் வெளியானது. அதில் குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரை போல தங்களை பாவித்துக்கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையில் எடுத்து, போக்குவரத்தையும் பொது அமைதியையும் பாதிக்கும் வகையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கையால் சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதால் யாரும் செயலில் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும். சசிகலாவுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா இக்கட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என வளர்க்கப்பட்டவர்கள். அந்த குடும்பத்தின் தலையீடுயில்லாமல் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நூறு சதவிகிதம் ஓபிஎஸ் எங்களோடு தான் இருப்பார். திமுகவின் பீடீம் சசிகலா தான் என்றார்.