பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல் சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.
இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.