சென்னை திருவொற்றியூர் காலாடி பேட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வைகாசி பிரம்ம உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் வீதி உலா புறப்படும் முன்பாக கோவில் கோபுர வாசலில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார்.
பின்னர் அடியார்கள் பல்லக்கை தங்களது தோளில் ஏற்றி சுமந்தவாறு வீதி உலா புறப்பட தயாரான நிலையில் திடீரென பல்லக்கை சுமக்கும் தண்டு உடைந்து, பல்லக்கு கீழே சாய்ந்ததில் பட்டாச்சியர் முரளி என்பவர் படுகாயம் அடைந்தார். இதனால் கோவில் நிர்வாகம் உடனடியாக கோபுர வாசலை மூடியதால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோன்று காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கருட சேவையின் போது, வீதி உலாவில் பல்லக்கின் மேல் இருபுறமும், பட்டாச்சாரியார்கள் இருவர் பெருமாளுக்கு குடை பிடித்தபடி வந்தனர் அப்போது, வழக்கம் போல் அங்குள்ள அருள்மிகு ஸ்ரீ கத்தீஸ்வரர் திருக்கோவில் முன்பு ஆகமப்படி ஏற்கனவே பட்டாச்சாரியார்கள் பிடித்து வந்த குடை மாற்றப்பட்டு, இரண்டு புதிய குடைகள் பல்லக்கில் இயற்றிய போது அதில் ஒரு குடை உடைந்து கீழே சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக சுவாமியின் வீதி உலா சற்று காலதாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பாஞ்ராத்திர, மற்றும் வைகானசம் எனும் ஆகமப்படி கோவில் திருவிழாவின் போது திருத்தேர் அல்லது சுவாமி எழுந்தருளிய பல்லக்கு குடை சாய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அரசவைக்கு பல்வேறு சிக்கல்களும் இடர்பாடுகளும் ஏற்படும் என்பது விதி என பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதாக வேத விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மற்றும் திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இத்தகைய அசம்பாவித சம்பவங்களால் தமிழகத்தில் அரசியல் மாற்ற நிகழ்வுகள் ஏற்படுமா ? என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.