'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் திருச்சியில் யாத்திரையானது நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அண்ணாமலை அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம்.
இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், நேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''திமுக காரர்கள் கேட்கிறார்கள் அந்த சிலையையும் வாசகத்தையும் எங்கே கொண்டுபோய் வைப்பீர்கள் என்று, சிலையை உடைக்கும் அளவுக்கு இங்கு யாரும் கேவலமானவர்கள் கிடையாது. சிலையாக இருந்தாலும் சரி வாசகமாக இருந்தாலும் சரி பொது இடத்தில் எங்கே இருக்க வேண்டுமோ அங்கு வைப்போம். எல்லா சிலைகளும் பொது இடத்தில் வைப்போம்'' என்றார்.