கடந்த ஆறு மாதங்களில் இந்தியா முழுவதும் தினம் மரணங்கள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் ஒரு இழப்பு கூட இல்லாத நிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சர்வதேச மருத்துவ மாநாடு நடைபெற்றது.
இதில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “கடந்த 2020 ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மே மாதத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மே மாதத்தில் இறந்தனர். அதிகபட்சமான இழப்பு அந்த மே மாதம். அதற்கு நான்கைந்து மாதங்கள் முன்பு தான் நான் 35 ஆண்டுக்காலம் அதிகம் நேசித்த மாற்றுத்திறனாளியான என் மகனை அந்த கொரோனாவிற்காக பலி கொடுத்தேன். அவர் எங்கும் வெளியில் போகவில்லை. அவர் இறந்ததற்கு காரணம் நான் தான்.
அப்போழுது நான் அமைச்சராக இல்லை. இருந்தும் நிவாரணப் பணிகளில் வெளியில் சென்று வீடு திரும்பும்போது என் மூலமாக என் மனைவிக்கு கொரோனா வந்தது. அவர் மூலமாக என் மகனுக்கு கொரோனா வந்தது. அதன் மூலம் ஒரு மகனை இழந்தேன்.
முதல் தவணை தடுப்பூசி 96% தாண்டியுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 92% தாண்டியுள்ளது. இதன் காரணமாகத்தான் நோய் எதிர்ப்பு சக்தி தமிழகத்தில் 90% தாண்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியா முழுவதும் தினம் மரணங்கள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் ஒரு இழப்பு கூட இல்லாத நிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதில் நீங்கள் பெரிய மன நிம்மதி அடையளாம் ” என்றார்.