இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.
தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.
இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 04 நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.