தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் நகராட்சி சார்பில் கடந்த 2013 ம் ஆண்டில் தேனி அல்லிநகரம் நகர் மன்ற தலைவராக இருந்த முருகேசன் தலைமையிலான கவுன்சிலர்கள் இருந்த போது தான் பழைய பஸ்ஸ்டாண்டு அருகே உள்ள பள்ளிவாசல் சந்து கடைசியில் நகராட்சி சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருக்க கூடிய மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மின் மயானம் செயல்பட்டு வருகிறது. ஆனால் துணை முதல்வர் ஒபிஎஸ் சின் சொந்த மாவட்டமான தேனியில் எரிவாயு தகனமேடை கடந்த ஆறு வருடங்களாக செயல் பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த எரிவாயு தகன மேடை செயல்படுவதில்லை.
இதுசம்பந்தமாக ஊழியர்கள் சிலரிடம் விசாரித்தபோது "எரிவாயு தகன மேடையில் உள்ள புகை போகும் குழாய் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடைந்து கீழே விழுந்து விட்டது அதை சரி செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் எரிவாயு தகன மேடை செயல்படுவதில்லை. அதனால் தான் இறந்தவர்களின் உடலை எரிவாயு தகன மேடையில் வைத்து எரிக்க முடிவதில்லை. தினசரி 10க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் இந்த எரிவாயு தகன மேடைக்கு வருவதால் அதை வெளிப்புறத்தில் உள்ள பழைய ஷெட்டில் வைத்து விறகுகளை அடுக்கி உடல்களை எரிக்கிறோம், சில நேரங்களில் ஒரே நேரத்தில் மூன்று நான்கு உடல்கள் வந்தால் ஷெட்டில் வைத்து எரிக்க இடம் இருக்காது . அதுனால ஷெட்டுக்கு வெளியே போட்டும் உடல்களை சில நேரங்களில் எரிப்போம்.அப்போது மழை பெய்துவிட்டால் பெரும் கஷ்டமாகிவிடுகிறது உடல்களும் சரிவர எரியாமல் போய் விடுகிறது. அதை கண்டு உறவினர்களும் சத்தம் போடுகிறார்கள்.
அப்படி இருந்தும் கூட உடைந்து போன புகை குழாய்யை சரி செய்யவும் மீண்டும் தகனமேடையை செயல்படுத்தவும் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தொகுதி திமுக எம்எல்ஏவான சரவணகுமார் தான் தொடர்ந்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகிறார்" என்று வருத்தத்துடன் கூறினார்கள்.
இது சம்பந்தமாக பள்ளிவாசல் தெரு பகுதி மக்கள் சிலரிடம் கேட்டபோது, "புகை கூண்டு இருந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தற்பொழுது எரிவாயு தகன மேடையில் இறந்தவர்களின் உடல்களை வைத்து எரிக்காமல் வெளியே வைத்து எரிக்கிறார்கள். அதனால் புகை முழுவதும் தெருக்களில் பரவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் கூறியும் கூட கண்டுகொள்வதில்லை அதனால் காலையிலிருந்து இரவு வரை இறந்தவர்களின் புகையைதான் சுவாசித்து வருகிறோம்" என்று கூறினார்கள்.
இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் விளக்கம் கேட்க பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும்கூட லைனில் பிடிக்க முடியவில்லை. ஆக துணை முதல்வராக ஒபிஎஸ்சும், அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாக இருந்தும் கூட சொந்த மாவட்டத்தின் தலைநகரான தேனியில் உள்ள எரிவாயு தகன மேடையை சரி செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது.