தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பார்க் திடலில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (23.01.2020) இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்பதற்காக இருந்தது.
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி வாக்களித்ததைக் கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்க வரும் அவருக்கு முஸ்லிம் அமைப்பினர் கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்தனர். இந்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து கம்பம் தபால் நிலையம் போக்குவரத்து சிக்னல் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தலைமையில் பாதுகாப்புக்காக 200- க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று (23.01.2020) இரவு 09.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு ரவீந்திரநாத் குமார் எம்பி தனது காரில் வந்தார். அவர் காருக்கு பின்னால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கார்கள் வந்தன. அப்போது திடீரென முஸ்லிம்கள் சிலர் கையில் கருப்பு கொடியுடன் அங்கு வந்து எம்.பியின் காரை முற்றுகையிட்டனர். மேலும் எம்.பியை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் எம்பி காரிலிருந்து இறங்காமல் உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென சிலர் அவரது காரை கையால் தாக்கினார்கள். அதேபோல் அவர் காருக்குப் பின்னால் நின்ற பாஜக நிர்வாகி ஒருவரின் காரையும் சிலர் தாக்கினார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து முஸ்லிம்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முஸ்லிம்கள் 43 பேரை போலீசார் கைது செய்து கம்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்கள்.
அதன் பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.பி. ரவீந்தரநாத் குமார் பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசினார் இச்சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பெரியகுளத்தில் உள்ள எம்பி ரவிந்திரநாத் குமார் வீடு மற்றும் பெரியகுளத்தில் உள்ள அவரது ஆபீஸுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இப்படி எம்பி ரவீந்திரநாத் குமார் கார் தாக்கிய விஷயம் மாவட்ட அளவில் காட்டுத்தீ போல் பரவியதால் கூடலூரில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுபோல் ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் சிலை முன்பு அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் குதித்தனர். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ்-சின் சொந்த ஊரான பெரியகுளம் காந்தி சிலை முன்பு அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட அளவில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவே அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.