தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் அ.ம.மு.க'வினர் பணம் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் காவல்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அதிகாரிகளை கட்சியினர் தாக்க முற்பட்டனர்.
அதிகாரிகளை பாதுகாக்க, தற்காப்பிற்காக காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர். இச்சம்பவத்தை அடுத்தை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரச் செயலாளரான பொன்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் பழனி, செல்வம், சுமன் ராஜ், பிரகாஷ்ராஜ் உள்பட ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து 150 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ், காவல்துறையின் தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் ஆண்டிபட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தங்கதமிழ்ச்செல்வனோ....
நேற்றோடு பிரசாரம் முடிந்துவிட்டது. தேர்தல் பணிகளில்இருக்கிறோம். நேற்று நடந்த சம்பவத்தில் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கான தன்னிலை விளக்கம் கொடுக்கவே உங்களை சந்தித்திருக்கிறேன் என்று பேச ஆரம்பித்த அவர் நேற்று கைப்பற்றப் பட்ட பணத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பணம் இருந்ததாக சொல்லப்படும் காம்ப்ளக்ஸ், அ.தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமானது. அதில் எந்த முட்டாளும் பணத்தை வைக்கமாட்டான். இது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட நாடகம். வருமானவரித்துறை திட்டமிட்டு நாடகமாடுகிறது. கைது செய்யப்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் திட்டமிட்டு அப்ரூவர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்யும் போது, அடையாளம் தெரியாத 150 பேர் என குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்தலின் போது பூத்களில் இருக்கும் எங்கள் ஆட்களைக் கைது செய்யக் கூட இது கடந்த 4 நாட்களாக தொகுதியில் உள்ள மக்களை வாக்காள மக்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 150 கோடிக்கு மேல் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு பணம் பட்டுவாடா செய்து இருக்கிறது. அதையெல்லாம் தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த அளவுக்கு இத்தொகுதியை பொருத்தவரை ஓபிஎஸ் கட்டுப்பாட்டில்தான் அனைவருமே சேயல்பட்டு வருகிறார்கள் எனக்கூறினார்.
இந்த பேட்டியின் போது ஆண்டிபட்டி சட்டமன்றத் இடைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயக்குமார் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.