விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதேபோல் தேமுதிகவும் இந்தத் தேர்தலை புறக்கணித்துள்ளது. திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனை போட்டியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
மனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், ''தேர்தல் நேரங்களில் 10 ஆளுங்கட்சி அமைச்சர்கள் இங்கேயே தங்கி அவர்களுடைய அதிகாரங்களை எல்லாம் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுதே வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம், எப்படி அவர்களை வாங்கலாம் என்றெல்லாம் திட்டம் போட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலைப் போன்றே செய்யலாம் என்று கனவில் இருக்கிறார்கள். இது விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறாது. காரணம் இது எங்களுடைய பகுதி, எங்களுடைய தொகுதி, நாங்கள் பலமாக இருக்கிற தொகுதி'' என்றார்.