ஐ.பி.எல். போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்தியது தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த பி.சி.சி.ஐ. முன்னாள் கௌரவ செயலாளர் சீனிவாசன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், அந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அந்த நாட்டுக்கு மாற்றம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த போட்டிகளை தென் ஆப்பிரிக்க அமைப்புடன் இணைந்து நடத்த இந்தியா சிமெண்ட் நிறுவனத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஒப்பந்தம் செய்தது. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், பி.சி.சி.ஐ-யின் கௌரவ செயலாளருமான சீனிவாசன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த 2015 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்து சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ட்டி.ராஜா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.