புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 10 ந் தேதி இரவு கோயில் சுற்றுச்சுவர் ஏறிக் குதித்த சிலர் அம்பாள் கருவறையைப் பார்த்து தலைக்கு மேலே கைகளை தூக்கி வணங்கிவிட்டு கோயில் வளாகத்தில் இருந்த எவர்சில்வர் உண்டியலை தூக்கிச் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து காசு, பணத்தை அள்ளி பைகளில் வைத்துக் கொண்டு மீண்டும் அதே இடத்தில் உண்டியலை தூக்கி வந்து வைத்துவிட்டனர். பின்னர் இரும்பு உண்டியலை உடைக்கும் போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிட கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தயாராக நின்ற பைக்கில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுவரை அவர்கள் யார் என்பது தெரியமல் இருந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அவர்களை காட்டிக் கொடுத்து விட்டது. முகத்தை மறைத்துக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்த இருவரில் ஒருவர் கண்காணிப்பு கேமராவைப் பார்த்ததும் அதுவரை தனது சட்டையால் மறைத்திருந்த முகத்தை கேமராவுக்கு முன்பு காட்டி ஏளனமாக பழிப்புக் காட்டி விட்டு உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சியும், பிறகு கண்காணிப்பு கேமராவை உடைத்து தூக்கி வீசுவதும் துள்ளியமாக பதிவாகி இருந்தது.
அறந்தாங்கி, கீரமங்கலம், வடகாடு காவல் சரகங்களில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட உண்டியல் திருட்டுகள் நடந்தும் எங்கேயும் யாரையும் பிடிக்க முடியவில்லை. ஆனால் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் தான் கேமரா பதிவில் ஒருவர் முகம் தெளிவாக பதிவாகி இருந்ததால் இந்த முறை உண்டியல் திருடர்கள் சிக்குவார்கள் என்ற நம்பிக்கை போலீசாரிடமும் இருந்தது.
இந்த வீடியோ காட்சிகள் 11 ந் தேதி நக்கீரன் இணையம் முதல் பல செய்தி சேனல்களிலும் வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. வீடியோ வைரலான நிலையில் அறந்தாங்கி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட ஒரு இளைஞர் மீது அப்பகுதி பொதுமக்களே சந்தேகப்பட்டு, சந்தேகப்பட்ட நபர்களின் இன்ஸ்டாகிராம் ஐடி யை திறந்து பார்த்த போது சந்தேகம் உறுதியானது. சம்மந்தப்பட்ட ஒரு சிறுவன் வீட்டிற்குச் சென்ற சில உள்ளூர் இளைஞர்கள், வீடியோவில் முகம் காட்டிய சிறுவனின் வீட்டிற்குச் சென்று சிறுவனின் தாயாரிடம் அந்த வீடியோ காட்சியை காட்டி உங்கள் மகன் முகம் தான் இது என்று சொல்லிவிட்டு வந்தனர்.
வீட்டிற்கு வந்த தன் மகனிடம் இதுபற்றி கேட்க யாரோ கிராபிக்ஸ்ல என் முகத்தை போட்டிருக்காங்க என்று சொல்லி தன் தாயை நம்பவைத்து சமாளித்தான். ஆனால் அடுத்தடுத்து பலர் வந்து சொல்லச் சொல்ல அவமானத்தின் உச்சத்திற்கே போன கணவனை இழந்த அந்த ஏழைத் தாய், தன் மகனை அழைத்து நீ திருடி இருக்க மாட்டாய். நம்புறேன். ஆனால் அந்தப் பசங்க கூட போய் தான் வீடியோவில் சிக்கி இருக்கிறாய். இப்ப இருட்டிருச்சு அதனால காலையில விடியும் போது நாம போலீஸ் ஸ்டேசன் போகணும். நல்லா தூங்கு என்று சொல்லி இரவு சோறு போட்டு சாப்பிட வைத்து தூங்க வைத்துவிட்டு இரவெல்லாம் கண் விழித்து தன் மகனை எப்போது விடியும் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருந்தார். (அதற்குள் போலீசாரும் தேடத் தொடங்கி இருந்தனர்) பொழுது விடிந்தது தன் மகனை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு சென்ற தாய், கீரமங்கலத்தில் உண்டியல் திருடின வீடியோவில் என் மகன் படமும் இருக்குனு ஊர்காரங்க சொல்றாங்க. இவன் தான் அது. இவனை நல்லா விசாரிச்சு நடவடிக்கை எடுங்கய்யா. இவன் செஞ்ச வேலையால வெளிய தலைகாட்ட முடியல என்று சொல்லிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
அதன் பிறகு நடந்த விசாரணையில்.. எங்க பக்கத்துவீட்டு முத்து 'வாங்கடா மது அருந்தலாம் என அழைச்சான். நானும், பள்ளிக்கூடம் படிக்கிற பையனும் போனோம். போற இடத்தில் மறமடக்கி ஆசைசவுந்தரும் சேர்ந்தான். மது அருந்தினோம். அப்புறம் தான் உண்டியல் தூக்கனும்னு சொல்லி எங்களை மிரட்டினாங்க. அப்ப போதையில தான் நான் முகம் காட்டி சிரிச்சுட்டேன். போதை தெளிஞ்சதும் தான் தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சேன். அதுக்குள்ள வீடியோவும் வெளியாகி எங்க அம்மாவை அழ வச்சுடுச்சு. அதனால தான் எங்கம்மா அழைச்சதும் வந்துட்டேன்' என்று சொல்லி முடிக்க அவன் சொன்ன ஆட்களில் ஆசைசவுந்தர் மட்டும் தலைமறைவாக மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கும் போது வந்த சிறுவனின் சித்தி உள்ளிட்ட உறவினர்களும் அவனது தாயாரைப் போலவே, எங்க பையன் தெரிஞ்சோ தெரியாமலோ இந்த தப்பு பண்ணிட்டான். அவன் இனிமேல் இது போல பண்ணக்கூடாது. இதோட அவன் மட்டுமல்ல அவன் கூட்டாளிகளும் திருந்தனும். நல்ல புள்ளைகளா வாழனும். திருந்தலைன்னா எங்களுக்கு இந்த புள்ளையே வேண்டாம்ய்யா என்று கண்ணீர் மல்க கூறிச் சென்றனர். இதைப் பார்த்த போலீசார்களும் கலங்கிவிட்டனர். இவ்வளவு நல்லவர்களோட புள்ளைங்க இப்படி பண்றிங்களேடா என்று அறிவுரை கூறி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சில போலீசார் நம்மிடம் கூறும் போது.. உண்டியல் திருட்டில் முகம் காட்டிய சிறுவனின் தாயார், சித்தி போல ஒவ்வொரு தாயும் இருந்தால் எந்த பிள்ளையும் தப்பு பண்ணமாட்டாங்க. தன் பிள்ளை தப்பு பண்ணிட்டான்னு தெரிஞ்சதும் அவனை கையோட காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்த அந்த தாயை மறக்க முடியாது. அவன் திருந்திடுவான். திருந்தலைன்னா அவங்க அம்மாவே இவனை எதை வேனும்னாலும் செய்துடுவாங்க.
ஆனால் அதே நேரத்தில் இங்கே கஞ்சா, திருட்டு என பல சம்பவங்களில் இது போன்ற சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து வரும் போது கூடவே வரும் சில தாய்மார்கள் என் பிள்ளை தவறு செய்திருக்க மாட்டான். அவனை விடுங்கன்னு விசாரணையே செய்ய விடாமல் செய்றவங்களும் உண்டு. அதேபோல இதே தவறு செய்யும் சிறுவர்கள், இளைஞர்களை காப்பாற்ற உள்ளூர் அரசியல்வாதிகளும் காவல் நிலையம் வந்து, தவறுக்கு வக்காலத்து வாங்கி பேசி அவர்களை மீட்டுச் செல்கிறார்கள். அல்லது உடனே நீதிமன்றம் போய் ஜாமீன் எடுக்கிறார்கள். இதனால் அந்த சிறுவர்கள், இளைஞர்களுக்கு நாம் எந்த தவறு செய்தாலும் நம்மை காப்பாற்ற ஆள் இருக்கு என்ற தைரியத்தில் அடுத்தடுத்து கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல், அதற்காக பைக் திருட்டு, தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்புனு சட்ட ஒழுங்கில் வளர்ந்து வருகிறார்கள். முதலில் இது போன்ற தவறுக்கு துணையாக அரசியல்வாதிகள் திருந்தினால் தவறு செய்வோரும் இனி நம்மை காப்பாற்ற ஆள் இல்லை என்று அவர்களும் திருந்துவார்கள்' என்றனர்.