Skip to main content

அன்பளிப்புகளை சுருட்டிய ஆசாமி... கள ஆய்வில் காவல்துறையினர்!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

theft in reception, Police in field inspection
                                                             மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது திருச்சிற்றம்பலம் கூட்ரோடு. இங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் (16.11.2021) மாலை 6 மணி அளவில் புதுச்சேரி மாநிலம் சேதாரப்பட்டு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் - ஹேமலதா ஆகியோரது  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வருகை தந்தனர். அவர்கள் தம்பதியருக்கு நகை, பணம் என அன்பளிப்புகளை வழங்கியுள்ளனர். அவற்றை மணமக்களின் நெருங்கிய உறவினர் செல்வகுமார் என்பவர் ஜவுளிக்கடையில் கொடுக்கப்படும் கட்டப்பை ஒன்றில் சேகரித்துவைத்திருந்துள்ளார்.

 

மணமக்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதால் செல்வகுமாரை மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு அழைத்தனர். அப்போது செல்வகுமார் தன்னிடமிருந்த அன்பளிப்பு பணம், நகை அடங்கிய பையை அருகில் வைத்துவிட்டு மணமக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்தவர், பிறகு அன்பளிப்பு பையை வைத்த இடத்தில் பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அந்தப் பை திருடுபோனது கண்டு செல்வகுமார் உட்பட அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். இதுகுறித்து செல்வகுமார் அருகில் உள்ள ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பையில் 50 ஆயிரம் பணம், 2 கிராம் எடையுள்ள 5 மோதிரங்கள், 5 தங்க காசுகள் ஆகியவை இருந்துள்ளன.

 

இதையடுத்து, திருமண மண்டபத்தில் அன்பளிப்பு பெறப்பட்ட பணம், நகை ஆகியவை திருடுபோனது குறித்து ஆரோவில் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்குப் பதிவுசெய்தார். மேலும், திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களைப் படம்பிடித்த வீடியோ காட்சிகள் உள்ளிட்டவைகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அன்பளிப்புப் பணம் வைக்கப்பட்டிருந்த அந்தப் பையைத் திருடிச் சென்றதைக் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் அந்த நபரைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பணம், நகை திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்