கும்பகோணம் அருகே அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரோடு, மருத்துவர் ஒருவர் கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ராம்குமார். ரஷ்யாவில் மருத்துவம் படித்தவர் சொந்த கிராமத்திற்கு சேவகனாக இருக்கும் வகையில் உள்ளூரிலேயே மருத்துவமனை வைத்துக்கொண்டு, சொந்த நிலத்தில் விவசாயத்தையும் கவனித்துவருகிறார். இவரது மனைவி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்துவருகிறார். டாக்டர் ராம்குமார் சிறுவயது முதலே துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துவருகிறார். பெரம்பலூரில் உள்ள துப்பாக்கிச்சுடும் கிளப்பில் உறுப்பினராக இருந்துவருகிறார். அந்தவகையில் இவரிடம் பல்வேறு வகையான துப்பாக்கிகள் புழகத்தில் இருந்திருக்கின்றன. துப்பாக்கிக்கான உரிமம் சிலமாதங்களுக்கு முன்பு காலாவதியானது, அதனை புதுபிக்காமல் போனதால் போலீஸாரிடம் சிக்கி சிறைக்கு சென்றிருக்கிறார்.
இது குறித்து காவல்துறையில் விசாரித்தோம்," தன்னிடமுள்ள ஒரு துப்பாக்கியை விளந்தகண்டம் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சக்திவேல் என்பவரிடம் கொடுத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று தரும்படி கூறியிருக்கிறார். ஏற்கனவே சக்திவேல் மீது சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரை போலீஸார் தீவிரமாக கண்காணித்தபடியே இருந்தனர். இந்தநிலையில் கள்ளத்துப்பாக்கியை சக்திவேல் விற்க முயற்சிப்பது, ரகசியமா தகவல் கிடைத்தது, பிறகு அவரை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தோம். சக்திவேல் தனது நண்பரான திருப்பனந்தாள் அருகே உள்ள முட்டக்குடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அரவிந்தன் என்பவர் மூலமாக கள்ளத்துப்பாக்கி விற்பனைக்கு கொண்டு சென்றபோது அவர்களை மடக்கிப் பிடித்து ராம்குமார், சக்திவேல், அரவிந்தன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்." என்கிறார்கள்.
இது குறித்து சோழபுரம் பகுதியில் விசாரித்தோம். அப்பகுதி மக்கள்" டாக்டர் ராம்குமார் வசதியாகத்தான் இருக்கிறார். அவரும் அவரது மனைவியும் கை நிறைய சம்பாதிக்கின்றனர். அதோடு சொந்தமாக ஏகப்பட்ட விவசாயம் நிலம் இருக்கிறது. இதில் பொறாமை கொண்ட யாரோ அவரை சிக்கவைத்துவிட்டனர்" என தெரிவித்தனர்.