தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தமிழ் பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி மைய வளாகத்தில் உள்ள பெரியார்-அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை அன்று கல்வி சார் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழக மக்கள் புரட்சிக் கழக தலைவர் அரங்க.குணசேகரன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார். இதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய பேராசிரியர் கல்வி மணி கூறியதாவது: "கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்களையும் தாய்மொழியாகிய தமிழ் வழியிலேயே நடத்த வேண்டும்.

கடந்த ஆண்டு தமிழ் வழி சேர்க்கை தொடக்கப்பள்ளியில் 30 சதவீதம் ஆக குறைந்துள்ளது. தமிழக அரசும், தொடக்கக் கல்வித்துறையும் தான் இதற்கு காரணம். தமிழக அரசு ஆங்கில மோகத்தை ஊக்குவிக்கும் வகையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது ஏற்கத்தக்கதல்ல. இதனால் மாணவர்கள் தாய்மொழியை கற்காமல், ஆங்கில வழி மோகத்திற்கு அடிமையாகி தமிழை மறக்கும் நிலை ஏற்படும். தாய்மொழியில் கற்கும் மாணவர்களே எதையும் புரிந்து கற்க முடியும்.
தமிழ்நாட்டில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து, ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் 20 ஆண்டுகளில் தமிழ்மொழி மறக்கடிக்கப்பட்டு, ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து விடும். தமிழின் மொழி வளம், சொல்வளம், கருத்து வளம் இவைகள் அழிக்கப்படும். அரசே கல்வியையும், மருத்துவத்தையும் வழங்க வேண்டும். கல்வி தனியார் கையில் சென்றால் அது வணிகமயமாகி விடும்" என்றார்.
விழாவில்.. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் நரேந்திரன், பேராவூரணி எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் துரை.நீலகண்டன் ஆகியோர் தமிழ் மொழியில் மருத்துவ நூல்களை எழுதியமைக்காக கருத்தரங்கில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியர்கள் கோச்சடை, தமிழ்வாணன், தமிழறிஞர் சின்னப்பா தமிழர், தமிழறிஞர் அ.த. பன்னீர்செல்வம், ஆயர் த.ஜேம்ஸ், முனைவர் சுந்தரம்பாள், மற்றும் ஆறு. நீலகண்டன், சித.திருவேங்கடம், ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஆசிரியர் மோகன், தமிழ்த் தேசிய பாடகர் சீர்த்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மருத.உதயகுமார் நன்றி கூறினார்.
தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு துண்டறிக்கை, ஊரகப் பகுதிகள் தோறும் பெற்றோர்களை சந்தித்து பரப்புரை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது