உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடப்பதால் ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். எட்டாவது கால யாக பூஜை, ஹோமம் ஆகியவற்றுடன் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. யாகத்தை அடுத்து மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருக்கலசங்கள் எழுந்தருளலும் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து காலை 09.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு நடைபெறுகிறது. அதேபோல் காலை 10.00 மணிக்கு அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு, மஹா தீபாராதனை நடக்கிறது.
மேலும் தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக மாலை 06.00 மணிக்கு பெருவுடையாருக்கு அபிஷேகம், இரவு 08.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.
குடமுழுக்கையொட்டி பெருவுடையார் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு 250 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் வருகையால் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.