மதுரை மேலூரில் தனது புதிய அமைப்பின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார் டிடிவி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பெயிரிட்டு கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன்,
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின்னர் அ.தி.மு.க வை வழிநடத்தும் தகுதி கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரனுக்கே உண்டு. முதலில் டில்லி உயர்நீதிமன்றத்திற்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் சரியான நேரத்தில் அண்ணன் நீதிமன்றத்தை அணுகி நூறு சதவிகிதம் அ.தி.மு.க நம் பக்கம்தான் உள்ளது என நிரூபித்துள்ளார்.
ஒரு அமைப்பின் அறிமுக விழாவிற்கு இவ்வளவு மக்கள் கூட்டம் என்றால் இரண்டரைகோடி அ.தி.மு.க தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. இனி வரும் எந்த தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் தினகரனே வெல்வார் என்பது நிச்சயம். அரசு அதிகாரத்தில் இருக்கும் மமதையில் சிலர் குக்கர் சின்னம் கெடச்சுடுமா? அ.தி.மு.க பெயரை உபயோகிக்க முடியுமா? என பேசிவருகின்றனர். உயர்நீதி மன்றத்தின் சொல்லிதான் இந்த அமைப்பே உருவாகிறது.
ஒரு கதையை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பத்மாசூரன் என்ற அரக்கன் ஒரு வருடமாக தவமிருந்து, சிவனிடம் யார் தலையில் கைவைத்தாலும் தலை சுக்குநூறாக வெடிக்கும் வேண்டும் என்ற வரம் பெற்றானாம். இறுதியில் வரத்தை சோதிக்க சிவன் தலையிலேயே கைவைக்க வந்தானாம் இந்த கதை யாருக்கு புரிகிறதோ இல்லையோ பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் புரியும் என நினைக்கிறேன்.
டி.டி.வி. இல்லை என்றால் இன்று இருவருமே இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். சசிகலாவின் ஆசியினால்தான் எடப்பாடி முதலமைச்சர் ஆனார். இந்த இரண்டு துரோகிகளையும் பாடம் கற்பிக்கத்தான் ஆர்.கே நகர் தொகுதியில் தினகரனை மக்கள் வெற்றிபெறச்செய்தனர். இன்று ஆரம்பித்த இந்த நிகழ்வு சரியான நேரத்தில் சரியான ஆதரவில் தொடங்கப்பட்ட நிகழ்வு. இப்போது வரை 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் எங்களுடன் கைகோத்துள்ளனர். தினரகன், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், அறந்தாங்கி எம்எல்ஏக்களை சேர்த்து மொத்தம் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிமாகும். துரோகிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும். மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். இவ்வாறு பேசினார்.