தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி திரேஸ்புரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான ஜான்சியின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு ஜான்சியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை தனித்தனியாக சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அப்போது அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது போலீசார் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர் என புகார் கூறினர். அவர்களிடம் விவரங்களை கேட்ட சீத்தாராம் யெச்சூரி இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார்.