விவசாயிகளின் விலை பொருட்களை வைக்க குளிர் சாதன கிடங்கு அமைக்க வேண்டும்- மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி கோரிக்கை!கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான வேலுச்சாமி தமிழகத்திலேயே அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். அதற்காக கழகத் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ பெரியசாமிக்கும் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ பி செந்தில் குமாருக்கும், நத்தம் சட்டமன்ற உறுப்பினரான ஆண்டி அம்பலத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து சென்னை சென்ற எம்பி வேலுச்சாமி தலைவர் ஸ்டாலின் வேண்டும் ஆசி பெற்றார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினும் வேலுச்சாமிக்கு வாழ்த்துக் கூறினார். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று பாராளுமன்ற உறுப்பினரான வேலுச்சாமி பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் டெல்லியில் உள்ள ரயில்வே உயர் அதிகாரியையும் சென்னையில் உள்ள ரயில்வே அதிகாரியையும் சந்தித்து மதுரையில் இருந்து சென்னைக்கும், சென்னையில்இருந்து மதுரைக்கும் செல்லும் தேஷாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை திண்டுக்கலில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தார்
பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு டெல்லி சென்ற எம்பி வேலுச்சாமி அங்குள்ள விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மத்திய அமைச்சரான நரேந்திர சிங் தோமரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எம்.பி.வேலுச்சாமி கூறியிருப்பதாவது, எனது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் ஆத்தூர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி நிலக்கோட்டை நத்தம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் விவசாயம் நிறைந்த பகுதிகளாக இருந்து வருகிறது.
அதுலையும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் காய்கறியும். நிலக்கோட்டை தொகுதியில் பூக்களும் நத்தம் தொகுதியில் மாங்காய் மற்றும் புளி அதிகமாக விளைகிறது. அப்படியிருந்தும் கூட இதுவரை எனது பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் எந்த ஒரு சட்டமன்ற தொகுதிகளிலும் விவசாயிகளின் விலை பொருட்களை பாதுகாக்க குளிர்சாதன கிடங்குகள் இல்லை. இதனால் தொகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு சரிவர விலை கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் விவசாய மக்களுக்கு குளிர்சாதன கிடங்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்.
அதுபோல் விவசாயத்திற்கும் தொகுதி மக்களுக்கும் போதுமான குடிநீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள் அவர்களுடைய குறைகளை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும் என தொகுதி தொடர்பான பல பிரச்சனைகளை முன்வைத்து மத்திய அமைச்சரான நரேந்திரசிங் தோமரிடம் கோரிக்கை மனுவை எம்.பி.வேலுச்சாமி கொடுத்திருக்கிறார். ஆனால் வேலுச்சாமி திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினராகி சில மாதங்களிலேயே மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டு வருவதை கண்டு தொகுதிகளில் உள்ள பொதுமக்களும் மாற்று கட்சியினரும் கூட எம்.பி.வேலுச்சாமியை பாராட்டி வருகிறார்கள்