தமிழக சட்டப்பேரவையில் இன்று (05.01.2019) தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு, கேள்வி நேரம் முடிந்தவுடன்,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விஷயத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு பிறகு, தமிழக அமைச்சரவை அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அது போல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையில், சமூக வழக்குகளில் கைதான முஸ்லிம் கைதிகள் பாராபட்சமான முறையில விடுதலை செய்யப்பட வில்லை. இவ்விரு விவகாரத்திலும் தமிழக அரசின் நிலை அறிய எழுந்து நின்று, சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டனர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
தாங்கள் விளக்கம் கொடுக்க முயன்றும், அதற்கு அனுமதி கிடைக்காததால் வெளிநடப்பு செய்ததாக கூறிய அவர்கள், இரண்டு கோரிக்கைகளை ஒரு தாளில் எழுதி அதை காட்டியவாறு வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானத்தையும், தமிழர்களின் உணர்வை கவர்னர் அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 1500 க்கும் அதிகமானோர் முன் விடுதலை ஆகியுள்ளனர். இதில் சமூக வழக்குகளில் கைதாகி 20 ஆண்டுகளை கடந்தும் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளை ஏன் விடுதலை செய்யவில்லை என கேள்வி எழுப்பினர்.
மேலும், 60 வயதை கடந்தவர்கள், நோயாளி கைதிகளையாவது விடுதலை செய்ய வேண்டாமா? தொடர்ந்து ஜனநாயக வழியில் இதற்காக குரல் கொடுப்போம் என்றனர்.