Skip to main content

''வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு கைமாறும்" -திருமாவளவன் எச்சரிக்கை!  

Published on 29/09/2020 | Edited on 29/09/2020
CUDDALORE DMK,VCK STRUGGLE

 

 

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் 3  வேளாண்  மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரியும் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதசார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

 

அவர் பேசும்போது,  "மத்திய பா.ஜ.க அரசு மூன்று வேளாண் மசோதாக்களை அவசர சட்டமாக கொண்டு வந்துள்ளது. அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து, நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தற்போது குளிர்கால கூட்டத் தில் அவசர சட்டமாக வேளாண் மசோதாக்களை  கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். வேளாண் மசோதாக்களை பா.ஜ.க அரசு கொண்டு வந்ததால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களது கூட்டணி கட்சியில் உள்ள ஒரு கட்சியின் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளார். அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. தேர்தலுக்காகவோ, பா.ஜ.க அரசு கொண்டு வந்தது என்பதற்காகவோ நாங்கள் எதிர்க்கவில்லை. விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பதற்காகத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். 

 

இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் விவசாயம் தொடர்பாக மாநில அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க கூடிய நிலை ஏற்படும். மேலும் சிறு குறு விவசாயிகளிடம் உள்ள நிலங்கள் பெரிய முதலாளிகளுக்கும்,  கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் மாறக்கூடிய நிலை ஏற்படும். இதுமட்டுமல்லாமல் பொதுவிநியோக திட்டத்தையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளை தனியார் நடத்துகின்றன. டாஸ்மாக் கடைகளை அரசாங்கம் நடத்தி வருகிறது. முதலமைச்சர் தலைமையில் டாஸ்மாக் கடைகள் இயங்குவதால் சாராய அதிபராக முதலமைச்சர் செயல்படுகிறார். தமிழகத்தில் இந்த மசோதாவை எதிர்க்கும் விதமாக முதலமைச்சர் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அவர் செய்யவில்லை. ஆனால்  எதிர்கட்சியான தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் ஆலோசனை செய்து விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை கண்டித்து போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துகிறார்" என்றார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்,  சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் இள.புகழேந்தி, ஐயப்பன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ம.தி.மு.க உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி,  விருத்தாசலம், நெய்வேலி திட்டக்குடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

 

சார்ந்த செய்திகள்