சென்னையில் நகை இலவசம் என ஆசை வார்த்தைக் கூறி ஒரே நபர் 15 மூதாட்டிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘குழந்தைகளை ஆசீர்வாதம் செய்தால் நகை இலவசம்’, ‘புதிய நகைக்கடையில் இலவசமாக தங்கம் தரும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.’ இப்படி ஆசை வார்த்தைகளைக் கூறி 27 நாட்களில் மட்டும் 15 மூதாட்டிகளிடம் நகை திருடி சென்ற திருமலை என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராவனம்மாள் என்ற மூதாட்டி, சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அருகில் நடந்து வந்த நபர் அவரிடம் பேச்சு கொடுத்து குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்தால் நகை தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற ராவனம்மாளிடம் மோதிரம் உட்பட நகைகளைப் பறித்துக்கொண்டு விட்டுள்ளார் அந்த நபர். இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இதேபோல் கடந்த 27 நாட்களில் மட்டும் 15 மூதாட்டிகளிடம் வெவ்வேறு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆராய்ந்தபோது 15 மூதாட்டிகளையும் ஏமாற்றியது ஒரே நபர்தான் என கண்டுபிடித்த போலீசார், அவரைப் பற்றி விசாரிக்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நகை திருட்டில் ஈடுபட்டு சிறை சென்ற திருமலை என்பது தெரியவந்தது. கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி விடுதலையான திருமலை, வெளியே வந்த 27 நாட்களில் 15 மூதாட்டிகளை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து திருமலையைத் தேடிவந்த போலீசார் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கியிருந்த நிலையில் திருமலையை கைது செய்தனர்.
தனியாக இருக்கும் முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ள போலீசார், ஆசை வார்த்தைகள் கூறி நிறைய மோசடிகள் நடப்பதால் முதியவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.