மெரினாவில்தான் போராட்டம் நடத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தம்பிதுரை கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தபோது,
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். அ.தி.மு.க., ஜனநாயகத்தை நம்பும் கட்சி. காவிரி பிரச்சினை இன்றைக்கு வந்தது அல்ல. 1974ம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. அப்போது ஆட்சியில் யார் இருந்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதை திசை திருப்ப திட்டமிட்டு தி.மு.க. மறியல் போராட்டம் நடத்துகிறது. இதை கண்டிக்கிறோம். எங்களது போராட்டம் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் ஓரளவு தீர்ப்பு சாதகமாக வரும் நிலை உள்ளது. அப்படி வந்து விடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் கீழ்த்தரமாக செயல்படுகிறார்கள்.
போராட்டங்களை காரணம் காட்டி தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தமிழகம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் போராடுகிறார்கள். மெரினாவில்தான் போராட்டம் நடத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. சட்டம், ஒழுங்கு கெடும் வகையில் நடந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கூறினார்.