Skip to main content

கரோனா பரப்பியதாக, மதப்பிரச்சாரம் செய்ததாகக் கைதான தாய்லாந்து நாட்டினருக்கு நிபந்தனை ஜாமீன்!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

 Thailand people corona spread issue - Highcourt bail

 

கரோனா தொற்று பரப்பியதாகவும், மத பிரச்சாரம் செய்ததாகவும் கைது செய்யப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு நிபந்தனை அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திற்கு வந்த தாய்லாந்தைச் சேர்ந்த ஆறு பேரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஈரோட்டில் தங்கி மதப் பிரச்சார வேலைகளில் ஈடுபடுவதாக, தாசில்தார் அளித்த புகாரின் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் தொற்று நோய்  பரப்பியது, சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்தது, மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


ஆறு நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட பின், புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,  சிறையில் உள்ள தாய்லாந்தைச் சேர்ந்த டன்ரமர்ன் சோவாங் ( Donramarn sohwang) உள்ளிட்ட ஆறு  பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன்,  சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து மதத்தைப் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டது சட்டப்படி குற்றம் எனவும், கரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவுவதற்கு இவர்கள் காரணமாக இருந்துள்ளதோடு, தொற்று உறுதியான பின்னரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல  காவல்துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் கூறி, ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு விதிக்கும் நிபந்தனைகளை  பின்பற்றி நடப்பதாக உறுதியளித்ததை அடுத்து, ஆறு பேரும், தங்கள் பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும், தங்கியிருக்கும் இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், காவல்துறையிடமும் தெரிவிக்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்து, எட்டு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி  நீதிபதி இளந்திரையன்  உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்