பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கவர்னருக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கவர்னருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-
1991-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று இருந்தது. அந்த சமயத்தில் பிரசாரம் மேற்கொள்ள ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ்காந்தியுடன் நானும் சென்றிருந்தேன்.
மிகவும் கவலை தரக்கூடிய அந்த சம்பவத்தில் சிக்கிய நானும் பலத்த காயம் அடைந்தேன். இதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 47-வது சாட்சியாக சேர்க்கப்பட்டேன்.
இந்த தாக்குதலில் இருந்து தப்பியபோதிலும் உளவியல் ரீதியாக அதில் இருந்து விடுபட எனக்கு பல ஆண்டுகள் ஆனது. இது ஒரு முக்கியமான வழக்காக இருந்தபோதிலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் இருந்து சி.பி.ஐ. கடந்து சென்றதாக கருதுகிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் வெடிகுண்டை வெடிக்க செய்வதற்காக பயன்படுத்திய பேட்டரியை வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தை முறையாக பதிவு செய்யாததன் விளைவு அவர் தண்டிக்கப்பட்டார். இதை சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் பின்னாளில் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து பேரறிவாளனுக்கு சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. பேரறிவாளன் குடும்பத்தினர் பற்றி நான் நன்கு அறிவேன்.
பேரறிவாளன் மீது இந்த வழக்கை தவிர வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது. ஆயுள் தண்டனைக்கான காலத்தை விட அதிக காலம் அவர்கள் 7 பேரும் சிறையில் இருந்து விட்டனர். 28 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்ததை போதுமானதாக கருத வேண்டும்.
உங்களது கையெழுத்தில் தான் அவர்களது விடுதலை உள்ளது. எனவே, மீதமுள்ள காலத்தை அமைதியான முறையில் கழித்திட மனிதாபிமான அடிப்படையில் அவர் களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.