வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம், மேல்மாந்தாங்கல் பகுதியில் பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிருஷ்ணகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட தற்போது காட்பாடியில் வசித்து வரும் இளையராணி என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இங்கிருந்து கயிறு தயாரிக்க தேவையான நார் மற்றும் கோழி பண்ணைகளுக்கு தேவையான நார் தூள்கள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று (06.05.2024) இரவு சுமார் 10 மணி அளவில் வீசிய பலத்த காற்றினால் நார் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு மேலே சென்ற மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீப்பொறியில் குவித்து வைக்கப்பட்டிருந்த நார்கள் தீப்பிடித்து மலமலவென எரிய தொடங்கியுள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் கொட்டப்பட்டிருந்த நார்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகின.
தொழிற்சாலையில் இருந்த மூன்று இயந்திரங்களும் தீயில் எரிந்து நாசமாகியது. தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர், காட்பாடி, சிப்காட் ஆகிய மூன்று தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க முயற்சித்து இன்று விடியற்காலை முற்றிலும் தீயை அணைத்தனர். அதிக அளவிலான நார்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாலும் காற்று வீசுவதாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து திருவலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.