தென்காசி குடிநீர் வடிகால் வாரியத்தின் திட்டம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட அலுவலகம் குற்றாலத்தை அடுத்த குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகிறது. இதன் அலுவலக பராமரிப்பு பணிகளின் உதவியாளராக ராமசுப்பிரமணியம் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ராமசுப்பிரமணியனுக்கு நிதிக்குழு அறிவித்த சம்பள உயர்வு நிலுவைத் தொகையான 3 லட்சத்து 93 ஆயிரத்து 700 ரூபாயை பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார். இதே அலுவலகத்தின் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் சீனிவாசன் என்பவர் ராமசுப்பிரமணியனின் சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவதற்கு 10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டிருக்கிறாராம். இதனால் மனமுடைந்து போன ராமசுப்பிரமணியன் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்திருக்கிறார். இதனையடுத்து தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மதியழகன், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட போலீசார் திட்டமிட்டு நேற்றைய தினம் ராமசுப்பிரமணியத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனுப்பி உள்ளனர்.
இதன்படி ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அலுவலகத்திலிருந்த சீனிவாசனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டீம் அதனைக் கண்காணித்து பணத்துடன் அவரை கைது செய்தனர்.