தர்மபுரியில் வியாழக்கிழமை (30.09.2021) நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தார்.
வத்தல்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக அவர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் திடீரென்று நுழைந்து பார்வையிட்டார். குற்ற வழக்குகள் மீதான நடவடிக்கைகள், பொதுமக்களிடம் காவல்துறையினர் நடந்துகொள்ளும் விதம், குற்றத்தடுப்பு செயல்பாடுகள் ஆகியவை குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், பென்னாகரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் சாப்பாடு தரமாக உள்ளதா? விடுதியில் போதிய வசதிகள் இருக்கின்றனவா? ஏதேனும் குறைகள் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.
அப்போது விடுதியில் தங்கிப் படித்துவரும் விஜய் என்ற மாணவனுக்கு அன்று பிறந்தநாள் என்பது தெரியவந்தது. அந்த மாணவனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சக மாணவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதையறிந்த மு.க. ஸ்டாலின், மாணவன் விஜயைப் பக்கத்தில் அழைத்து அன்புடன் கைகுலுக்கி, பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறினார். எதிர்பாராத தருணத்தில் முதல்வர் நேரில் வந்து வாழ்த்து கூறிய சம்பவம், அந்த மாணவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த விடுதி மாணவர்களிடமும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் ஆய்வை முடித்த முதல்வர் வெளியே வந்தபோது, பொதுமக்கள் கூடிநின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
அப்போது மாவட்ட திமுக மீனவரணி துணை அமைப்பாளர் மிதுன் காளியப்பன், தனது மகன்வழி பேத்திக்குப் பெயர் சூட்டுமாறு குழந்தையை முதலமைச்சரிடம் கொடுத்தார். குழந்தையை வாஞ்சையுடன் தூக்கிக் கொஞ்சிய அவர், ‘வெற்றிச்செல்வி’ எனப் பெயர் சூட்டினார். இச்சம்பவம் குழந்தையின் பெற்றோர் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.