
ஈரோடு மாவட்டம் அந்தியூரை ஒட்டியுள்ள வனப்பகுதி ஒன்றில் எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக் கூடாக சடலம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் தட்டைக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக் கூடாக உடல் ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பர்கூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எலும்புக் கூடாகக் கிடந்த உடலை மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் எரிக்கப்பட்டது ஆணாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் வனத்தின் உள்ளே சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நிகழ்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடல் எரிக்கப்பட்டு ஐந்து நாட்களாகி இருக்கலாம் எனவும் போலீசார் விசாரணையில தெரிய வந்திருக்கிறது. எரிக்கப்பட்ட நபர் யார்? வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப்பகுதியில் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கிச் சென்று எரித்தவர் யார் என்பது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.