Skip to main content

“உ.பியில் தமிழ் கற்பிக்கப்படுகிறது” - தி.மு.கவை மீண்டும் சீண்டிய யோகி ஆதித்யநாத்!

Published on 01/04/2025 | Edited on 01/04/2025

 

 Yogi Adityanath slams DMK again and says Tamil is being taught in UP

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி பா.ஜ.க தவிர மற்ற தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதே சமயம், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான், கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு விடுவிக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.  இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகி வருகிறது. மேலும், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. 

இந்த சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்த போது, தங்களுடைய வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணரும் போது திமுகவினர் மாநிலம் மற்றும் மொழிகள் மூலம் பிளவுகளை உருவாக்குவார்கள் என்று கூறினார். இவரது கருத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு அதற்கு எதிர்வினையாற்றி இருந்தார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் திமுகவை சீண்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், “உத்தரப் பிரதேசத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். இதனால், உத்தரப் பிரதேசம் சிறியதாகி விட்டதா?. புதிய வேலைவாய்ப்புகள் உத்தரப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தங்களுடைய குறுகிய அரசியல் நலன்களுக்காக இந்த மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள், தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் ஒரு வகையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள்” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்