தென்காசி மாவட்டத்தின் கடையம் நகரிலுள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பம் முதல் ப்ளஸ் 2 வரை, சுற்றியுள்ள கிராமத்தின் மாணவ மாணவியர்கள் சுமார் மூவாயிரம் பேர் பயின்று வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 7ம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் பேப்பரில் தகாத வார்த்தைகளை எழுதியுள்ளனராம். இது ஆசிரியர்களுக்குத் தெரியவர கண்டித்திருக்கிறார்கள். அதில் 7ம் வகுப்பு மாணவனான வெங்கேடஷை உடற்கல்வி ஆசிரியர் ராமமூர்த்தி கண்டித்ததோடு அவனது சட்டையைக் கழற்ற வைத்துக், குனியச் சொல்லி அவனது முதுகில் பிரம்பு கொண்டு அடித்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளாராம். ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் முதுகில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பிரச்சினையானதால் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் தரப்புகளும் பேசி சமாதானமாகி விடுவது என்ற முடிவும் எடுக்கப்பட்டதாம்.
ஆனால் சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பிற்கான சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்ற எண்ணில் ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறதாம்.