"மனித சமுதாயத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் கரோனாவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாமும் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காவலர்கள் தங்களது பணியின்போது முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். காவலர் குடியிருப்புகளில் குப்பைகள், கழிவுநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதாவது சுகாதார சீர்கேடு இருந்தால் எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள்" என 2 நாட்களுக்கு முன்னர் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கினார். ஆனால், எங்களது குடியிருப்புகள் இப்பவும் சாக்கடை கழிவுநீரில் மிதக்கின்றன என வேதனைப்பட்டார் நமது காவல்துறை நண்பர்.
அதைத் தொடர்ந்து பேசியவர், "தேனாம்பேட்டை காவல்நிலையத்தை ஒட்டி இருக்கும் காவலர் குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்கள் வசிக்கின்றன. காவல் நிலையத்திற்கும், குடியிருப்புக்கும் இடையே சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை ஒரு வாரமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தினமும் மெட்ரோ பணியாளர்கள் வருகிறார்கள் சாக்கடையை உறிஞ்சி எடுக்கின்றனர். அவர்கள் சென்ற 5 நிமிடத்தில் மீண்டும் குளம் போல் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு என்பதே இல்லை.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எங்களது பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே விளையாடுகின்றனர். அவர்களுக்கு தொற்று நோய் பரவி விடுமோ என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது. கரோனாவை விட இந்த சாக்கடை எங்களுக்கு பெரிய பீதியை ஏற்படுத்துகிறது" என்றார்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் வீடு இதே தேனாம்பேட்டை காவல் சரகத்தில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அவரும் இந்த பிரச்சனையை கவனிப்பார் என்று நம்புவோம்.!