ஒவ்வொரு வருடமும் வடகிழக்குப் பருவமழையான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் பெய்யும் அடைமழை ஓய்ந்த பின்பு டெங்கு காய்ச்சல் தலையெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் மற்றும் சுரண்டைப் பகுதிகளில் அதிகரிப்பவை, ஏடிஸ் எனும் கொசு. இந்த வகை கொசுவினால் உற்பத்திச் செய்யப்படும், டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடங்களிலும், உயிரிழப்புகளும் ஏற்பட்டதுண்டு.
மழை ஓய்ந்த பின்பு மழை நீரானது, வீடுகளின் மாடிப்புறங்கள் புறக்கடைகளில் ஒதுக்கப்பட்டு கிடக்கும் கொட்டாங்கச்சிகள், பழைய பாத்திரங்கள், டயர்கள் உள்ளிட்டவையில் தேங்கி நிற்கிறது. நல்ல தண்ணீரில் மட்டுமே டெங்குவை உற்பத்திச் செய்கிற ஏடிஸ் கொசு, முட்டையாகி கொசுவாக உருவெடுக்கிறது. சாதாரணக் கொசுவை விட இந்த ரகம் வீரியமானது. காலை, மாலை எனக் குறிப்பிட்ட கால அளவில்தான், இந்த ரகக் கொசு மனிதர்களைக் கடித்து ரத்தம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அதன் காரணமாக உடம்பில் வைரஸ் பரவி நோய் எதிர்ப்பு சக்தியான பிளேட் லெஸ் எனப்படும் உடம்பிலுள்ள வெள்ளை ரத்த அணுக்களைத் தாக்கி அழிக்கிறது. எனவே இதற்கான காய்ச்சல் அறிகுறி கண்டோர், உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் தென்காசி சுகாதார வட்டாரத்தினர்.
தற்போது கரோனா ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்த நேரத்தில் அடுத்த கட்டமாக டெங்கு காய்ச்சல் தென்காசி மாவட்டத்தின் சுரண்டைப் பகுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சுரண்டைப் பேரூராட்சிக்கு உட்பட்ட திரவியம் நகர்ப் பகுதியில் 8 வயதுச் சிறுமி உட்பட மூன்று பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், செண்பகக் கால்வாயில் தேங்கியுள்ள சாக்கடை கழிப்பிடத்திலிருந்து திறந்துவிடப்பட்ட கழிவுநீரால் இந்தப் பகுதியில், அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள் பகுதி மக்கள்.
தொடர்ந்து 11, 12, 13- வது வார்டுகளான சிவ குருநாதபுரம், வரகுணராமபுரம், கீழச் சுரண்டை பகுதியிலும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரையிலும் சுமார் 15- க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நேரத்தில், இதே பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நிலைமையைக் கருத்தில் கொண்டு டெங்கு பரவல் தடுப்புப் பணியினை முன்னெடுத்து சுரண்டைப் பகுதி முழுவதும் கொசுக் கொல்லி மருந்து அடிக்கும் பணியைப் பேரூராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.