நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு மத்தியில் வசிக்கும் கிராம மக்கள் சமவெளிப் பகுதிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பவானிசாகர் வனப் பகுதியை ஒட்டியுள்ளது தெங்குமரஹடா கிராமம். இக்கிராமத்தில் பழங்குடியினர் அல்லாத 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. புலிகள் காப்பகங்களுக்கு மத்தியில் உள்ள இக்கிராமம் வனவிலங்குகளால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இக்கிராமம் நீலகிரி மாவட்டத்திலிருந்தாலும் தெங்குமரஹடா கிராமத்திற்கு செல்லும் பாதை ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது. கிராமத்தைச் சுற்றி 'மாயாறு' எனும் ஆறு செல்வதால் பரிசல் மூலமாகவே இந்த கிராமத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது.
மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து என்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் நிலை உள்ளது. கிராமத்தைச் சுற்றி சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பகங்கள் இருக்கிறது. இதனால் வன விலங்குகளின் நலனைக் கவனத்தில் கொண்டு கிராம மக்களை சமவெளிக்கு இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. நீதிமன்றத்தின் பரிந்துரையை அடுத்து கிராம மக்களும் சமவெளிப் பகுதிக்குச் செல்ல விருப்பம் உள்ளதாகக் கடிதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் தெங்குமரஹடா கிராமத்தில் நடைபெற இருக்கிறது. ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பதிவு செய்யப்படும் தெங்குமரஹடா கிராம மக்களின் கருத்துக்கள் வரும் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.