அறப்போர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் " லஞ்ச ஒழிப்பு துறைக்கு இன்று கொடுப்பட்டுள்ள புகாரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனங்களுக்கு கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் அதிக டென்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், போன்றவைகளுக்காக கிட்டத்தட்ட 19 டென்டர்கள் விடப்பட்டது. அந்த 19 டென்டர்களுக்கும் மொத்தம் மதிப்பு கிட்டத்தட்ட 6 கொடியே 50 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என்றும். இந்த 19 டெண்டர்களில் அதிகபட்ச டென்டர்கள் கே.சந்திரபிரகாஷ் என்பவரின் கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட் என்ற எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் கோருபவர்களில் கே.சந்திரசேகர், ராபர்ட் ராஜா என்ற இருவர்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த இரண்டு பேரில் யாரேனும் ஒருவருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஜூன் 2014-லிருந்து நவம்பர் 2015 வரை அந்த கால இடைவெளியில் மொத்தம் 38 டென்டர்கள் கோரப்பட்டுள்ளது. இந்த டென்டர்களும் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் என்ற எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனமும், கே.சந்திரபிரகாஷின் கே.சி.பி எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமும் மட்டுமே பங்கு பெற்று இருக்கிறது. அதிலும் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் நிறுவனத்திற்கு அதிக டெண்டர்களை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2015 ஜனவரி முதல் அக்டோபர் வரை கோவை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 131 டென்டர்களில் கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனத்திற்கு அதிகபட்ச டென்டர்களை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் எஸ்.பி பில்டர்ஸ் எனப்படும் எஸ்.பி மணியின் பினாமி நிறுவனங்களே டென்டர் கோருதலில் இடம் பெற்று இருக்கிறது. இந்த 131 டென்டர்களின் மொத்த மதிப்பு 52 கொடியே 99லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் ஆகும்.
அதேபோல் சென்னை மாநகராட்சியில் ஜனவரி 2018 முதல் மே 2018 வரை விடுக்கப்பட்ட டென்டர்களில் அர்பன் கம்யூனிட்டி ஹெல்ப் சென்டர் யு.பி.ஹெச்.சி எனப்படும் பணிசேவை தொடர்பான டென்டர்களிலும் எஸ்.பி வேலுமணியின் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் நிறுவனத்திற்கே டென்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டென்டர்களிலும் கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மொத்த டென்டர்களில் 88 சதவிகிதம் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் எனும் எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனத்திற்கு சென்று சேர்ந்துள்ளது.மேலும் இந்த டென்டர்களில் கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட், வரதன் இன்ஃப்ரா ஸ்ட்ரக்ஜர், எஸ்.பி பில்டர்ஸ் நிறுவனங்களுக்கும் டென்டர் தரவேண்டும் என்பதற்காகவே சில நிபந்தனைகளும் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது ஒரு டென்டர் கோரும் நிறுவனத்தின் கடைசி மூன்றாண்டின் நிதிநிலையை டென்டர் விதிமுறை பொறுத்தே கவனத்திற்கு டென்டர் கொடுக்கப்படும் . ஆனால் இது போன்ற விதிமுறைகளை தங்கள் வசதிக்காக மாற்றியமைத்து அந்த நிறுவனங்களுக்கு டென்டர்கள் கிடைக்க முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாயை எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனம் சம்பாரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.