![Temple Robber arrested by kanyakumari police](http://image.nakkheeran.in/cdn/farfuture/7A0ImytFcCjJfBaU1E3kPJNjSyllFh4SHmbO-ag269A/1630920698/sites/default/files/inline-images/th-1_1750.jpg)
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இந்து கோவில்களின் கதவை உடைத்து, குத்து விளக்கு மற்றும் வெண்கல பாத்திரங்களைக் கொள்ளையடித்துச் செல்லும் சம்பவம் நடந்துவருகிறது. இது காவல் நிலையத்தில் புகாராகவும் பதிவாகி, அந்தந்த கோவில்களில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் உருவத்தை வைத்து போலீசார், விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், அந்த கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்தார். தனிப்படை போலீசாரின் விசாரணையில் அந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே டீம்தான் என தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கொள்ளை டீமைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
![Temple Robber arrested by kanyakumari police](http://image.nakkheeran.in/cdn/farfuture/noLHOCxSZueXVEVv5uqL48DtlEafut7KbO3DgzhTc5s/1630920716/sites/default/files/inline-images/th-2_434.jpg)
குருந்தன்கோடு பகுதியில் கோவில் பூஜை பொருட்களான வெண்கல பாத்திரங்களுடன் வந்த சரல் பகுதியைச் சேர்ந்த அனீஷ்ராஜ் (33) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அவர்தான் கோவில் குத்துவிளக்கை கொள்ளையடித்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் விசாரணையில் குமரி மாவட்டத்தில் கடந்த 31.12.2020 முதல் 26.8.2021 வரை கோவில் கொள்ளையில் ஈடுபட்டது அனிஷ்ராஜும், அவரோடு சேர்ந்த 2 கூட்டாளிகளும்தான் என தெரியவந்தது.
பிடிப்பட்ட அனீஷ்ராஜிடம் இருந்து 20 கோவில்களில் கொள்ளையடித்த பெரிய மற்றும் சிறிய வெண்கல குத்து விளக்குகள், வெண்கல குடங்கள், வெண்கல தட்டுகள், மணிகள் என கோவில்களில் பயன்படுத்தும் வெண்கல பொருட்கள் என்று ரூ. 8.60 லட்சம் மதிப்பிலான பொருட்களைப் போலீசார் மீட்டனர். பிடிப்பட்டவரின் கூட்டாளிகள் இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். பலே கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.