புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீமிசல் குடியிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற "வழிவிடும் கருப்பசாமி கோயில் உள்ளது. தினசரி பக்தர் வந்து போனாலும் ஆடி பௌர்ணமி திருவிழாவே மிகச் சிறப்பு. இந்த நாளில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுகிறார்கள்.
ஆடி பௌர்னமி திருவிழாவில் என்றதும் மீமிசல் சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் ஏம்பக்கோட்டை ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து வானவேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பால்குடம் மற்றும் பறவை காவடி, அலகுகாவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கருப்பசாமி கோவிலை வந்தடைந்தனர். அங்கு கருப்பசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கருப்பசாமி அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் பூசாரி மாதவன் அரிவாள்கள் மீது ஏறி நின்று சாமி ஆடி முதலில் நாட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று நாட்டுக்கான நல்வாக்கு சொல்லத் தொடங்கினார்.
இந்த வருசம் விளைச்சல் அதிகமாகும், ரியல் எஸ்டேட் தொழில் நல்லா இருக்கும். இந்த ஆண்டு ஒரு அரசியல் தலைவர் உயிர் சேதம் ஏற்படும். போன வருசம் சொன்னேன் நடந்துச்சு அதுபோல ஒரு உயிர்சேதம் ஏற்படும். கண் நோய் வரும், வைரஸ் காய்ச்சல் வரும் கருப்பசாமி காப்பாத்திக் கொடுக்கிறேன். விலைமதிக்கக் கூடிய சிலைகள் கண்டெடுக்கப்படும், தங்கம் விலை குறையும், கும்பாபிசேகங்கள் அதிகம் நடக்கும், ஒரு அரசியல் குடும்பம் தடுமாறும், டாக்டர் எக்சாம்ல மதிப்பெண்ல குழப்பம் ஏற்படும். கவர்மெண்ட் வேலை நிறைய கிடைக்கும் 16 கலெக்டர்கள் பாசாவாங்க. நகைக்கடன் தள்ளுபடி வரும். மழை கம்மியாவும், இடி காற்று அதிகமாவும் இருக்கும்" என்று நாட்டுக்கான அருள்வாக்கு சொல்லி முடித்தார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.கருப்பசாமி கோயில் பூசாரி நாட்டுக்கான அருள்வாக்கு சொன்னது எப்படி நடக்குமோ என்ற குழப்பத்துடன் சென்றனர் பக்தர்கள்.