கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது சேவூர் கிராமத்தில் வரதராஜப்பெருமாள் கோயில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. கோவிலில் பல்வேறு தரப்பு மக்களும் சென்று வழிபட்டு வருகிறார்கள். பெருமாளுக்கு உகந்த முக்கிய திருவிழாக்கள் அவ்வப்போது நடந்து வந்தன.
இந்த நிலையில் இந்தக் கோயிலை ஒரு சமூகத்தினர் மட்டுமே உரிமை என கொண்டாடுவதாக மற்ற தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது சம்பந்தமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பிரச்சினை எழுந்த நிலையில் அப்போதைய திட்டக்குடி டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் காலங்களில் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் கோயில் விழாவை நடத்துவது என பேசி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோயில் புனரமைப்பு செய்து வரும் 3ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று(2022) காலை ஒரு தரப்பினர் மட்டும் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மற்ற தரப்பினர் கோவிலுக்கு சென்று அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த தகவல் அறிந்த வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி போலீசார் முன்னிலையில் உருட்டுக் கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இடையில் புகுந்த அவர்களை தடுத்து நிறுத்தி அமரவைத்து சமாதானம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வரும் 28ஆம் தேதி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டு அதன் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவரும் கோவிலில் இருந்து கலைந்து சென்றனர். போலீசார் முன்னிலையில் உருட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு அடிக்க சென்ற சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.