செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சக்தி தேவியை வழிபாடு செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாட்களில் பெண்கள் அம்மனை வேண்டி விரதமிருந்து ஆலயங்களில் சென்று வழிபாடு செய்தும், மாவிளக்கு ஏற்றியும், நெய்தீபம் ஏற்றியும் வழிபாடுசெய்வர். இந்நிலையில், புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின்போது முதல் 3 நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பாள் அருள்பாலிப்பார். இந்நாளில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பான அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழா இன்று (08.10.2021) தொடங்கியது.
ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல் நாளான இன்று மாலை ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து, விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாயார் சன்னதியில் இரவு ஸ்ரீரங்கத்து கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும் வணங்கின. கோவில் யானையின் இத்தகைய வியத்தகு செயலை பெருந்திரளான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர். ஸ்ரீரங்கம் கோயிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகிற அக்டோபர் 12ஆம் தேதி நவராத்திரி ஏழாம் நாளில், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய இயலும் தாயார் திருவடி சேவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.